Monday, June 27, 2011

வாசிக்கப் படாத வரி

ரசித்த கவிதை
ருசித்த கவிதை
சுகம் சேர்த்த கவிதை
சோகம் தீர்த்த கவிதை
மனம் நனைத்த கவிதை
வருடிய கவிதை
நெருடிய கவிதை
திருடிய கவிதை
எல்லாவற்றிலும் எளிதாய் மறப்பது
கவிஞன் எனும் வாசிக்கப் படாத வரி

Friday, June 24, 2011

நில்லா மழையில்...

நில்லா மழையில்
நனையும் நிலவு
நிலவை நனைத்த துளி
சிந்தும் தமிழமுது
உடலெல்லாம் மதி வாசம்
மழை வந்து வலை வீசும்
திசை மறந்த துளியாய்
எங்கோ எங்கோ எங்கோ
மனதின் நிழலாய் நான்



Thursday, June 9, 2011

இன்றைய பதிப்பகம்



உலக அரசியல்
தீவிரவாதிகள்
கற்பழிப்புக் கதைகள்
கச காசா லேஹியம்
கோலப் புத்தகம்
சினிமா கிசுகிசு...
இந்தக் கூட்டத்தில் கிடந்தது
விலைமதிப்பில்லா
 ஒரு நிராகரிக்கப் பட்ட
கவிதை நூல்...
விலையும் மதிப்புமின்றி!

Wednesday, June 1, 2011

இன்று பெய்த மழை!

எனைச் சுற்றி மௌனம்
மழையோடு அந்தி வானம்
தேன் கலந்த கள்ளாய்
மனம் நனைத்தது

நான் கடந்து வந்த
நாள் திரும்பி வந்து - நான்
நனைய மறந்து போனதை
நினைவில் சொன்னது

காய்ச்சலுக்கு ஆசை
கம்பளிக்கு ஆசை
காரணங்களின் கருவூலத்தில்
காளான் நின்றது - அதில்
வண்ணத்துப் பூச்சி ஒன்று
வந்து மொய்த்தது

விடுப்பு மடல் எழுதி
தட்டி விட்டேன் மனப் புழுதி
பொய் சொன்ன நிறைவு
மீண்டும் என் இதழோரம்

மறக்காமல் இவை செய்துவிட்டு
வெளிப்பூட்டு தாள் போட்டுவிட்டு
மன வானின் முதல் மேகம் தொட்டுக்
கவிதை செய்த நொடியில்
மழைத் துளியொன்று எனக்காக
வந்து விழுந்தது மடியில்
 என்றும் இல்லாத மெல்லிசையும்
இருந்தது இடியில்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Saturday, May 21, 2011

நுரை சேர்க்கும் தவம்!

யௌவனத் தேசத்து மகரந்தம்
வண்ணத்துப் பூச்சியின் கால்களில்
அது சிந்திய மனவானில்
ஆயிரம் வண்ணத்து வானவில்

மழையின் வாசம் மனமெங்கும்
மழலைக் காடு எழில் மின்னும் - என்றோ
எண்ணி வைத்த விண்மீன்கள்
வந்து நிற்கும் பகலில்
எண்ணம் மூச்சில் கலந்து
கொஞ்சம் சுற்றும் பால்வெளியில்!

யௌவனம் போல இல்லை
மழலைக்கும் முடிந்தது எல்லை
பொழிந்து கொண்டே ஓடிவிட்ட
ஒற்றை வான்முகில்போல
கரைகின்ற காலம் வரைகின்ற மாயம்
தருகின்ற யாவும் சுகம்

ஒரு தருணத்தில் நின்று
காலத்தைப் பார்ப்பது
அலையின் நுரை சேர்க்கும் தவம்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Friday, May 13, 2011

அந்தித் தேன் சிந்தித்தேன்

என் கவிதைகள் பெரும்பாலும் என்னைச் சுற்றி கிடப்பவையே! அதிலும் இயற்கை என் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு மாயம்! அப்படி என் மனதில் கவிதை சிந்திய ஒரு மாலைப் பொழுதைப் பற்றிய கவிதை இது!

அந்தித் துளி சிந்திச் சிந்தி
சிவக்கும் வானம்!
விண்மீன் தோன்றி
தந்திச் சுருக்காய் இரவைப் பாடும்!

அந்தித் தேன் வானமெங்கும்
சிந்தியதைச் சிந்தித்தேன்
சிந்தியதேன்?! - இது
யார் வந்துச் சிந்திய தேன்?!
கதிரோடு தங்கிய தேன்
இரவுக்கு முந்தியதேன்?!

கடுநஞ்சாம் பகற்பொழுது
அமிழ்தாம் இரவு!
இடையிற் தோன்றும்
அந்தித் தேனைக் காண்பது அரிது!

அலுவலுக்கு மத்தியிலும்
அந்தியைச் சந்தித்த அப்பொழுது
ஊனுக்குள் ஈருயிராய் இன்னும் பதிவு!

முன்பனிக் காற்று மோதிக் கலைகையில்
பூத்த மலர்போல் - நெஞ்சில்
மந்திரத் தொனியாக ஒலித்தபடி
அந்தித் தேன் வழியும்
இனி பா முழுதும்
அந்தத் தேன் தொட்டே - என்றும்
இனி உயிர் எழுதும்

Tuesday, May 10, 2011

வேரில் பூத்த மலர்

ஒவ்வொரு மழைப் பொழுதையும் ஒரு கவிதையாய் வடிப்பது என் வழக்கம். அப்படி ஒரு நாள் மழை தூறலாய் விழுவதை வருணித்து எழுதிய கவிதை இது!

மாலை மழை வானத்தில்
மந்தகாசத் தூறல்
பூமீது தேன் குதிக்கும்
மின்னல் வேகச் சாறல்!

முத்தமாக விழும் சொட்டு
வாய் திறக்கும் முகில் மொட்டு
வாசம் காற்றில் புது மெட்டு
பாடும் காதல் தொட்டு

பூ முகிழ்த்தும் மழை முத்தம்
பா முகிழ்த்தும் இடிச் சத்தம்
குளிரில் ஆவல் கொண்ட மண்ணில்
வேர் பூ பூக்கும்!

சிந்தித் தெறிக்கும் வானவில்லை
சந்திப் பிழைகள் நீக்கிவிட்டு
சந்தமாக்கும் தொழிலெனக்கு
முகிலா மழை கொட்டு!

வேலி  பார்த்துப் பெய்யாமல்
காணி காக்கும் பொது மழையே
காத்திருந்த மனத் தரிசில்
கவிதை நெரிசல்

வேறெவர்க்கும் சொல்லாதே
வேந்தன் தந்த வரிகளிதை
தேவையுள்ள தருமிக்கே
வேண்டும் பரிசில்!



Sunday, April 3, 2011

பிரசார லேகியம்

அவருக்கோ செரிக்கவில்லை
மருத்துவரும் சொல்லிவிட்டார்
"ஏதாவது செய்யுங்கள்
குறைப்பதைக் குறைக்க"!

இருக்கவே இருக்கு
பிரசார லேகியம்
ஒரு நாளைக்கு இரு வேளை
பேசலாம்... குறையும்!

நல்ல வார்த்தைகள்
நம்பிக்கை தரும் சொற்கள்
பஞ்சத்தில் வீழ்வதில்லை
எந்த நாட்டிலும்! 
 
செரிக்காதவர் பேச்சை
பசியோடு கேட்கும்
பாமரனுக்கோ லேகியமே உணவு!



Saturday, April 2, 2011

வெற்றியின் வணக்கம் (World cup dedication)

காற்றில் ஒருவித வாசம்
இம்மண்ணின் மைந்தர்கள்
வெளிவிடும் சுவாசம்

எந்தன்  கதிரொளி வீசும்
இம்மண்ணின் பெருமையை
காலங்கள் பேசும்!

என் இதழ் இவர் பதம் தொடும்போதும்
பணிவின் கண்ணீர் கர்வம் அணைக்கும்
தாய்மையின் நிரல் இவர் உள்ளம்
இனி எந்தன் முகவரி இவர் பெயர் ஆகும்

வெற்றி எந்தன் வணக்கம்
இம்மண்ணுக்கு என்று உரித்தாகும் நாளும்


மன முகில் விம்மிப் புடைத்து...!

ஓடையில் விழுந்த தென்றலாய்
மனம் குளிர்ந்தது ஏதோ சிந்தையில்!
விரல்களின் நாணம் உடைத்து
தமிழ் கிளர்ந்தது மனமுகில் விம்மிப் புடைத்து!

எனக்கு உரிமையில்லா தனிமையில்
எனை உரிமை கொள்ளாத மௌனத்தோடு
நிசப்தப் பாய்மீது கிடந்தேன்
தாய்மடிச் சுகமதை தமிழ் மடியிற் துறந்து!

சந்தி வேளைச் சூரியன்
கரைத்து வைத்த சந்தனம்
எந்தன் முதல் பாவுக்கு
இறைவன் தந்த சம்மதம்

கூரைக் காகம் கூட
எந்தன் பாடல் கேட்டுக் கரையும்
கோடை வானக் கிளிக்கும்
எந்தன் சந்த நடை புரியும்

என் மனமுடுத்தக் கள் எல்லாம்
இனி கவிதையாக வடியும்
அந்தக் கள் கவரும் கள் வெறியர்
கவிஞராக முடியும்!

தன் கையெழுத்தில் கூட
இவன் வாழாத நாளும்
இவன் எழுத்தொன்றும் படிப்போர்க்கு
வாழ்வாக வேண்டும்


Saturday, March 26, 2011

யுகச் சாபம்

மனிதன் வணங்கிய மண் நான்
முகம் மாறிக் கிடக்கின்றேன்!
நதிகள் தவழ்ந்த இன்பம்,
சுவராகி இழக்கின்றேன்!

பிள்ளை விரல் பிசைந்து விளையாட
என் உள்ளம் கசிந்து களி மண்ணானேன்
ஏரும் எருதும் வருடும் சுகத்தில்
முப்போகம் விளைத்து ஒரு தாயானேன்

அமிலம் தெளிக்கா மனிதனுக்கு
அமுதம் தருகின்ற கடலானேன்
இல்லாத நஞ்சை என் மேல் தெளிக்க
அந்தோ! இறந்தே வெறும் திடலானேன்

நெற்றி விளையும் வியர்வைத் துளி - விதை
நெல்லில் உரமானதொரு காலம்
கலையாய் இருந்த விவசாயம்
தொழில் நுட்பமானது இந்த யுகச் சாபம்

மனிதன் பாசம் இன்றிப் போனதும்
என் வாசமும் குன்றிப் போனது
வான்மழை நாளம் வாசித்த ராகம்
சுருதியை இழந்து மாண்டது

உன் பாதம் தாங்கிப் பாரமும் தாங்கும்
அன்னையும் நானும் ஒன்று
உன் மூச்சில் கலந்திருந்த தேசம் நான்
வெறும் மணலாகிப் போனேன் இன்று!

Sunday, March 20, 2011

அநாதை

உறவற்ற வார்த்தை
உருகொண்டு வாழும்
பிஞ்சாய் பிறந்தவுடன்
பெயராகிப் போகும்!

விதிஎழுதும் பெயராய்
பிறப்போடு ஒட்டும்
அர்த்தமிதற்கென்ன
தனி மரக்காடு?!

தவறிப் போகும் உயிர்கள்
தவிப்புக்கு கொடுக்கும்
உன்னத உயிலோடு
பிஞ்சின் பெயர் சேரும்

சில நிமிட ஆசை
சீர்குலைக்கும் சிசு வாழ்வை
கருவோடு கலைவார் - இல்லை
தெருவோடு அலைவார்

தமிழென்னும் அமுதில்
ஒரு துளி விஷமா?
இந்த வார்த்தையும் வேண்டாம் இனி

Saturday, March 5, 2011

தென்றல்

எத்தனைக் கவிஞனின் பெருமூச்சோ?
நீ இத்தனை இதமாய் தீண்டுகிறாய்!
மெத்தென மோதிடும் தென்றலே
நெஞ்சம் பித்துற்று அலையுது காண்க நீ!

தேடி வந்து இளைப்பாற்றும் சரணாலயம்
நீ உருவில்லா ஓங்காரச் சரணா லயம்
கண்படா வீணையே - பிறர்
கண்படும் என்றே - உனை
கண்விட்டு மறைத்ததோ காலம்?

கண்படாதாகிலும் சொல் படும்
உனைத் தமிழின் கண் படிப்பேன் சாற்று!
உனைக் காமுறும் நெஞ்சுக்கு
கள்ளில்லை மாற்று - கொடுங்காதலும்
நஞ்சாகும் காண்!

பேசாமல் கண்மூடி உன்னோடு கரைவதாய்
கற்பனையில் மிதக்கும் ஊண்
தூணின்றி குடை விரிக்கும் மனதில் வான்

Tuesday, March 1, 2011

ஆத்தா!

தூரத்துல கொலவயிட்டு
நடவுக் கன்னு நட்டு வெச்சு
கூலிக்கு மாரடிக்கும்
மயிலு, குயிலு, சிட்டு, முப்பாத்தா!

மார் நனைச்சி பசியடங்கி
கண் வளரும் புள்ள
நோவாம தூங்கிட
தாலாட்டு படிச்சிருந்தா முப்பாத்தா

நெடுநாளா நடு மத்தியில
கெள விரிச்சி வேப்பமரம்
தொட்டில் கட்டிப் போட எசவாயிருக்கு

அடிமரத்துல சந்தனம்
அது மத்தியில குங்குமம்
மஞ்சத் துணி மரத்திடுப்புக்கு
சூலம் ரெண்டு பாதுகாப்புக்கு

எளசுங்க, நேந்து கட்டும்
தொட்டில்கள ஏத்துக்கிட்டு
புள்ள வரமும் குடுத்து
கொஞ்சிகிட்டிருக்கா இந்த
செல்ல ஆத்தா!

Sunday, February 27, 2011

காட்டி மறைத்த வழி...

நாற்திசை காட்டியோடு நாற்சந்தி
அதன் எல்லா கரத்திலும்
ஒரே ஊரின் பெயர்!

எல்லா திசையிருந்தும் வந்த பாதச் சுவடுகள்
அந்தக் கைகாட்டியின் காலடியில் அத்தமித்தன

மனம் கர்வம், கவிதை இரண்டுமிழந்தது
தடித்த மௌனத்தின் நிழல்
ஒரு பேரொலி அறைந்த காயத்தோடு

ஒரு வேளை...
திசைகாட்டி இல்லையென்றால்
நடந்திருப்பேன்
இன்னும் நம்பிக்கையோடு

மனத்தில் இன்னுமொரு கேள்வி மிச்சம்
நடை வண்டியோடு கையேடு எதற்கு?!

http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/

Thursday, February 10, 2011

அட்டை

மௌனமும், கொஞ்சம் புன்னகையும் கலந்து
பூங்கொத்து ஏந்திச் சிரித்தன அந்தக் குழந்தைகள்

இதயத்தின் வடிவம், இன்னபிற நிறத்திலும்
பிறப்புக்கும் நட்புக்கும் நெடுநாளைய உறவுக்கும்
உள்ளொன்று வைத்து நலம் விசாரிக்கும்
உத்தி நிறைந்த வரி விளம்பரங்கள்!

காதல் அட்டை வாங்கினர்
காதல் அட்டைகள்!

முதியோருக்கான அட்டைகள்
அழுக்கேறிய "பழைய சரக்கு"-வாஸ்துப்படி
அக்கினி மூலையில்

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்!

http://mashookpoetry.blogspot.com/
http://mashookrahman.com/

Sunday, February 6, 2011

பிறவிப் பயன்

எங்கள் வீதியில் இறந்த யாரோ ஒருவருக்காக எழுதப் பட்ட கவிதை - 19/06/2003

அதிர அதிர அடித்து
ஆடிக் கொண்டிருந்தார்கள்
அவனுக்கு கேட்கவில்லை
அந்தோ பரிதாபம்!

இறந்துவிட்டதால் திணை மாறிவிடுமா?
"அவன்" அத்தமிக்கவில்லை என்பது என் கணக்கு

வாழ்வுக்கும் சாவுக்கும் நூலிழை தூரம்
அருகிருக்கும் இலக்குக்கு
பயணங்கள் வெகு தூரம்!

ஒரு புவி...கூறுகள் கோடி!
அத்தனைப் பிளவுக்கும்
றுமுனைக் கத்தி

ற்றலில், ஓலத்தில்
எத்தனை அன்புப் பிரவாகம்!!
மரித்த செவிகளுக்கு
கடைசி விருந்து!
ப் + இறப்பு = பிறப்பு
ஒரு மெய்யெழுத்து உள்ளடக்கும்
உயிர்ப் பொருள்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Saturday, January 29, 2011

இன்னுமா உறக்கம்?!

காலையில் சாலையில்
அடிபட்ட நாய்க்கு மருந்திட்டு

அவசரப் பொழுதில் வாகனம் நிறுத்தி
பள்ளிச் சிறுவர்க்கு வழிவிட்டு

தெருவின் ஒவ்வொரு கோடியிலும்
யாசகனின் பசி தீர்த்து

ஊருக்கு உழைக்கும் யோகம் கண்டு - பின்
எனக்கான அலுவலிலும் நுழைந்து

இன்முகம் மாறா புன்சிரிப்புடன்
ஒரு நாளைச் சுமுகமாய் முடித்து

என் வாகனத்தில் இருந்த அணில்
அதுவாய் இறங்கும்வரை பொறுத்து

அந்த இடைவெளியில் அந்தி வான் முகிலில்
மழலை நாட்களை விரித்து

கண்கள் பனித்து மென் தென்றல் சுகித்தபடி...
திடீரென அந்த அணில் "Excuse me boss...it's 5:30" என்றது

அதிர்ந்து விழித்தேன்...அருகில் கடிகாரம்
இது...இன்னுமொரு அவசரத் திங்கட்கிழமை

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Wednesday, January 26, 2011

ஐயக் கருக்கலே

தேயிலைமீது பனித்துளி
தேநீர் சுமக்கும் தென்றல்!
மேகம் நடத்துகின்ற முழு அடைப்பில்
தன்னைப் பதித்தன கண்கள்

பனித் திரையில் தென்றல் பரியில்
உத்திரச் சூரியக் கதிர் இறங்க
பொன்னொளி வெள்ளம் நெஞ்சிலடித்ததும்
நிலவை மறந்தது நெஞ்சு - விடியலில்
விழுந்த மனதும், மிதக்கின்ற மஞ்சு!

இயற்கை ஓவியன் கழுவித் தெளித்த
தூரிகை தந்த விருந்தோ?! - இது
மயக்கமளித்து மனநோய் தீர்க்கும்
அரிய வகையின் மருந்தோ!!

கொல்லன் ஊதிய தங்கத் தூசு
பனியில் கலந்ததுவோ!!
என் விரல்கள் எய்தும்
வரிகள் கிழித்த கிழி தான் சிந்திடுதோ!!

ஐயக் கருக்கலே
விடிந்து கருத்தைச் சொல்
மையலில் விழுந்தது மனது!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Wednesday, January 19, 2011

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறப்பும் ஒக்கும் - இதை
உய்த்துணர்ந்து அடக்கம் உற்றால்
அமரரில் உய்க்கும்

தாழ்மை உள்ள நிலமே - நீரை
நிரம்ப பிடிக்கும் - அதிலே
தாகமுள்ள உயிர்கள் பருகி
நிரம்ப படிக்கும்

அறிவைப் பகுக்கப் பகுக்க - அறிவு
அறிவே பிறக்கும்
மனிதனைப் பகுக்கும் அறிவை
மனிதம் மனிதம் பழிக்கும்

இன மத குலத்தால் உயர்வு
நவிலும் எவர்க்கும்
ஊழின் அம்பு எய்து வந்து
இழி மரணம் கொடுக்கும்

இந்த உண்மை உற்று உணர்ந்து
வாழும் எவர்க்கும்
யாண்டும் இடும்பை இல

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Sunday, January 9, 2011

இனி...

நிலவைத் தான் விரும்புமென்று
அல்லியை கதிர் எரிப்பதில்லை
அல்லியின் நாணத்தை
அற்பமென்று பழிப்பதில்லை

அல்லிக்கொரு குளம்
தாமரைக்கொரு குளமென
யாரும் தோற்றி வைப்பதில்லை
எங்கு எதன் பார்வை
அன்பால் மிகுமோ...
அங்கு அது வாழப் புகும்
அன்பைக் கரு கொண்டு
வழிந்து ஓடும் நதிதானே
உயிர்கள் கால் நனைக்கும் யுகம்!

தழுவிக் கலைகின்ற
காலத்தின் அற்ப சுகம்
வியர்வை உலருதற்குள் மறையும்
உயிருக்குள் உயிர் விழித்துப்
பூத்திருந்த அன்பேதான்
ஊழின் முடிவுவரை உறையும்

இன்பம் சிரிதன்று
பேரின்பம் ஒன்றென்று
அன்பைக் குடித்த உயிர் உரைக்கும்

தன ஒளியில் பாதியினை
நிலவிற்கு தந்த கதிர்
அல்லியை எப்படிப் பழிக்கும்?!
இனி...
காலம் அன்பைப் படிக்கும்

http://mashookrahman.com/
http://www.mashookrahman.blogspot.com/
http://www.mashookpoetry.blogspot.com/