Saturday, May 21, 2011

நுரை சேர்க்கும் தவம்!

யௌவனத் தேசத்து மகரந்தம்
வண்ணத்துப் பூச்சியின் கால்களில்
அது சிந்திய மனவானில்
ஆயிரம் வண்ணத்து வானவில்

மழையின் வாசம் மனமெங்கும்
மழலைக் காடு எழில் மின்னும் - என்றோ
எண்ணி வைத்த விண்மீன்கள்
வந்து நிற்கும் பகலில்
எண்ணம் மூச்சில் கலந்து
கொஞ்சம் சுற்றும் பால்வெளியில்!

யௌவனம் போல இல்லை
மழலைக்கும் முடிந்தது எல்லை
பொழிந்து கொண்டே ஓடிவிட்ட
ஒற்றை வான்முகில்போல
கரைகின்ற காலம் வரைகின்ற மாயம்
தருகின்ற யாவும் சுகம்

ஒரு தருணத்தில் நின்று
காலத்தைப் பார்ப்பது
அலையின் நுரை சேர்க்கும் தவம்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Friday, May 13, 2011

அந்தித் தேன் சிந்தித்தேன்

என் கவிதைகள் பெரும்பாலும் என்னைச் சுற்றி கிடப்பவையே! அதிலும் இயற்கை என் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு மாயம்! அப்படி என் மனதில் கவிதை சிந்திய ஒரு மாலைப் பொழுதைப் பற்றிய கவிதை இது!

அந்தித் துளி சிந்திச் சிந்தி
சிவக்கும் வானம்!
விண்மீன் தோன்றி
தந்திச் சுருக்காய் இரவைப் பாடும்!

அந்தித் தேன் வானமெங்கும்
சிந்தியதைச் சிந்தித்தேன்
சிந்தியதேன்?! - இது
யார் வந்துச் சிந்திய தேன்?!
கதிரோடு தங்கிய தேன்
இரவுக்கு முந்தியதேன்?!

கடுநஞ்சாம் பகற்பொழுது
அமிழ்தாம் இரவு!
இடையிற் தோன்றும்
அந்தித் தேனைக் காண்பது அரிது!

அலுவலுக்கு மத்தியிலும்
அந்தியைச் சந்தித்த அப்பொழுது
ஊனுக்குள் ஈருயிராய் இன்னும் பதிவு!

முன்பனிக் காற்று மோதிக் கலைகையில்
பூத்த மலர்போல் - நெஞ்சில்
மந்திரத் தொனியாக ஒலித்தபடி
அந்தித் தேன் வழியும்
இனி பா முழுதும்
அந்தத் தேன் தொட்டே - என்றும்
இனி உயிர் எழுதும்

Tuesday, May 10, 2011

வேரில் பூத்த மலர்

ஒவ்வொரு மழைப் பொழுதையும் ஒரு கவிதையாய் வடிப்பது என் வழக்கம். அப்படி ஒரு நாள் மழை தூறலாய் விழுவதை வருணித்து எழுதிய கவிதை இது!

மாலை மழை வானத்தில்
மந்தகாசத் தூறல்
பூமீது தேன் குதிக்கும்
மின்னல் வேகச் சாறல்!

முத்தமாக விழும் சொட்டு
வாய் திறக்கும் முகில் மொட்டு
வாசம் காற்றில் புது மெட்டு
பாடும் காதல் தொட்டு

பூ முகிழ்த்தும் மழை முத்தம்
பா முகிழ்த்தும் இடிச் சத்தம்
குளிரில் ஆவல் கொண்ட மண்ணில்
வேர் பூ பூக்கும்!

சிந்தித் தெறிக்கும் வானவில்லை
சந்திப் பிழைகள் நீக்கிவிட்டு
சந்தமாக்கும் தொழிலெனக்கு
முகிலா மழை கொட்டு!

வேலி  பார்த்துப் பெய்யாமல்
காணி காக்கும் பொது மழையே
காத்திருந்த மனத் தரிசில்
கவிதை நெரிசல்

வேறெவர்க்கும் சொல்லாதே
வேந்தன் தந்த வரிகளிதை
தேவையுள்ள தருமிக்கே
வேண்டும் பரிசில்!