Saturday, April 2, 2011

மன முகில் விம்மிப் புடைத்து...!

ஓடையில் விழுந்த தென்றலாய்
மனம் குளிர்ந்தது ஏதோ சிந்தையில்!
விரல்களின் நாணம் உடைத்து
தமிழ் கிளர்ந்தது மனமுகில் விம்மிப் புடைத்து!

எனக்கு உரிமையில்லா தனிமையில்
எனை உரிமை கொள்ளாத மௌனத்தோடு
நிசப்தப் பாய்மீது கிடந்தேன்
தாய்மடிச் சுகமதை தமிழ் மடியிற் துறந்து!

சந்தி வேளைச் சூரியன்
கரைத்து வைத்த சந்தனம்
எந்தன் முதல் பாவுக்கு
இறைவன் தந்த சம்மதம்

கூரைக் காகம் கூட
எந்தன் பாடல் கேட்டுக் கரையும்
கோடை வானக் கிளிக்கும்
எந்தன் சந்த நடை புரியும்

என் மனமுடுத்தக் கள் எல்லாம்
இனி கவிதையாக வடியும்
அந்தக் கள் கவரும் கள் வெறியர்
கவிஞராக முடியும்!

தன் கையெழுத்தில் கூட
இவன் வாழாத நாளும்
இவன் எழுத்தொன்றும் படிப்போர்க்கு
வாழ்வாக வேண்டும்


No comments:

Post a Comment