Tuesday, September 16, 2014

Tuesday, August 26, 2014

பழகிய மனித கூட்டம்





கபடதாரிகள் நாடகத்தில்
உண்மையாளன்தான் கோமாளி

அவன் சொல்லும் உண்மைக்கு
சிரித்தே பழகிய மனித கூட்டம்தான் ஏமாளி!

அவன் விழுவதைப் பார்த்து
சிரிக்கும் கூட்டத்தின் கருத்தில்
அது பொழுதுபோக்கு!

இது விதையில் சிதையுண்டு
வளர்ந்து நிழலாடும்
உலுத்து நிற்கின்ற தேக்கு

அவன் விழுந்தும் எழுகிறான்
இவன் சிரித்து விழுகிறான்

இது மனித மந்திகளின்
குறை மதிச் சிந்தையின் நீட்சி

பிறன் வலியில் அகமகிழ்ந்து
உழன்று கிடப்பதே
மனித இனத்தின் பெரும் வீழ்ச்சி!

Wednesday, August 20, 2014

புகையின் படிமம்



தழல் மேடையில்
எழில் நாடகம் எரிகின்றது!
நிழல் ஆடிட
விழல் நெஞ்சமும் தகிக்கின்றது!

ஒளி வேம்பிலே கரு நாகம்
நுனிக் கொம்பிலே நடமாடும்
குடுவையின் விளிம்பில் விஷம்
அமுதில் கலந்திடும் பயம்

மூச்சின் வெப்பம் குறைய
உள்ளம் கல்லாய் உறைய
கலங்கிய கடலில்
எரியும் கற்பூரமாய் – ஒரு
உயிரின் தள்ளாட்டம்...
இது யுகத்தில் படிந்த புகையின் படிமம்
உருவெடுக்கும் வெள்ளோட்டம்!




Saturday, June 7, 2014

போகாத மரணம்!


ஓலம் கண்ணீர் மௌனம் ஒருபுறம்
புன்னகை களிப்பு கேளிக்கை மறுபுறம்
இதற்கிடையில் கிடக்கும் பிணத்தைப் போலே
விசும்பும் உண்மை மனம்!

யார் இறப்பிற்கோ சென்று வந்து
தலை முழுகிடும் உடல்
உடன் மறந்திடும் மனம்

சிந்திய கண்ணீர் காயும் முன்னே
எரியும் வயிற்றின் புகையில் மறையும்
காற்றில் பறக்கும் கிழவனின் சிதையாய்
தொலைந்து போகும் உறவின் நிழல்கள்

உண்ட நஞ்சு உள்ளிருந்து
ஊறி ஊறிப் புகை எழுப்ப
உறைந்துவிட்ட மனதின் ரணம்

மரணம்!

மொய்க்கும் ஈயை தட்டும் கைகள்
மறுக்கின்றன மரணத்தை!

Tuesday, March 11, 2014

ரணப் பிரசவம்

நுரைகள் கூடி கேலி செய்தன என் நிஜத்தை
என் நிஜம் ஒளிந்து கொண்டது என் நிழலுக்குள்

ஒவ்வொரு துளியாய் வானம் விதைத்தது எனைத் தேடி
என் தொப்புள் கொடி சுற்றி இறந்து கிடந்தேன் என்னுள்ளே

ஒரு மின்னல் வந்து செய்து வைத்தது ரணப் பிரசவம்
என் சாம்பலில் இருந்தே எழுந்தேன் வாய்மை ஒளியோடு

நுரைகள் தெரித்துக் கலைந்தன என் நிழல் பார்த்து
என் நிஜத்தை அணைத்து உயர்த்தியது ஒரு மழை மேகம்

கலந்தேன் முகிலில் துளியாக - என்
வாய்மை ஒளியோடு - இனி
பொழிவேன் புவி மேல் தவறாமல் - என்
ஆன்மத் தமிழோடு!

Wednesday, October 9, 2013

நகச்"சுத்தி"

சுட்டுவிரலில் நகச்சுத்தி
தலையில் அடித்தது வலி
மருந்துகள் இட்டும் குறையவில்லை

மனதில் பிடித்தது கிலி

வலி குத்திக் குடைகையில் தானாக
என் எதிரிகள் பேர் சொல்லி கத்தினேன்

வணங்காமல் விரல் விரைத்து நின்றது
எதிர்படுவோர் குறை சொல்லி நின்றது

அடங்கா விரல்மீது வைத்து அழுத்தினேன்
ஒரு எலுமிச்சை!

Friday, August 16, 2013

புதிய சுகம்

பழைய துளி
புதிய சுகம்
இனிய மழை
இயற்கை வரம்

என் கவிதை நீ உடுத்தி
தண் மழையே நடை எடுத்தாய்
விண்கல்லாவது விழட்டுமென்று
வெயில் பொழுதில் தவம் கிடந்தேன்

எனை நனைத்தாய்
ஏன் நனைத்தாய்
உனை நினைத்தே
நிதம் நனைந்தேன்

கனவின் சுகம் நீ கொடுத்தாய்
கண் மழையாய் நீ வழிந்தாய்
பால் மழையே நீ சுரந்து
தாய்த் தமிழாய் மணக்கின்றாய்

உனக்கெனவே உருகுகின்றேன்
உன் நினைவில் உறைந்து நின்றேன்
நீயில்லா பொழுதுகளில் - என்
உயிர் துடிப்பில் சுரங்களில்லை

மென்மழையே கேளடி
என் சிறகும் நீயடி
உன் ஸ்பரிசம் தானடி - இவன்
கவி சுரக்கும் தாய்மடி