Saturday, March 26, 2011

யுகச் சாபம்

மனிதன் வணங்கிய மண் நான்
முகம் மாறிக் கிடக்கின்றேன்!
நதிகள் தவழ்ந்த இன்பம்,
சுவராகி இழக்கின்றேன்!

பிள்ளை விரல் பிசைந்து விளையாட
என் உள்ளம் கசிந்து களி மண்ணானேன்
ஏரும் எருதும் வருடும் சுகத்தில்
முப்போகம் விளைத்து ஒரு தாயானேன்

அமிலம் தெளிக்கா மனிதனுக்கு
அமுதம் தருகின்ற கடலானேன்
இல்லாத நஞ்சை என் மேல் தெளிக்க
அந்தோ! இறந்தே வெறும் திடலானேன்

நெற்றி விளையும் வியர்வைத் துளி - விதை
நெல்லில் உரமானதொரு காலம்
கலையாய் இருந்த விவசாயம்
தொழில் நுட்பமானது இந்த யுகச் சாபம்

மனிதன் பாசம் இன்றிப் போனதும்
என் வாசமும் குன்றிப் போனது
வான்மழை நாளம் வாசித்த ராகம்
சுருதியை இழந்து மாண்டது

உன் பாதம் தாங்கிப் பாரமும் தாங்கும்
அன்னையும் நானும் ஒன்று
உன் மூச்சில் கலந்திருந்த தேசம் நான்
வெறும் மணலாகிப் போனேன் இன்று!

Sunday, March 20, 2011

அநாதை

உறவற்ற வார்த்தை
உருகொண்டு வாழும்
பிஞ்சாய் பிறந்தவுடன்
பெயராகிப் போகும்!

விதிஎழுதும் பெயராய்
பிறப்போடு ஒட்டும்
அர்த்தமிதற்கென்ன
தனி மரக்காடு?!

தவறிப் போகும் உயிர்கள்
தவிப்புக்கு கொடுக்கும்
உன்னத உயிலோடு
பிஞ்சின் பெயர் சேரும்

சில நிமிட ஆசை
சீர்குலைக்கும் சிசு வாழ்வை
கருவோடு கலைவார் - இல்லை
தெருவோடு அலைவார்

தமிழென்னும் அமுதில்
ஒரு துளி விஷமா?
இந்த வார்த்தையும் வேண்டாம் இனி

Saturday, March 5, 2011

தென்றல்

எத்தனைக் கவிஞனின் பெருமூச்சோ?
நீ இத்தனை இதமாய் தீண்டுகிறாய்!
மெத்தென மோதிடும் தென்றலே
நெஞ்சம் பித்துற்று அலையுது காண்க நீ!

தேடி வந்து இளைப்பாற்றும் சரணாலயம்
நீ உருவில்லா ஓங்காரச் சரணா லயம்
கண்படா வீணையே - பிறர்
கண்படும் என்றே - உனை
கண்விட்டு மறைத்ததோ காலம்?

கண்படாதாகிலும் சொல் படும்
உனைத் தமிழின் கண் படிப்பேன் சாற்று!
உனைக் காமுறும் நெஞ்சுக்கு
கள்ளில்லை மாற்று - கொடுங்காதலும்
நஞ்சாகும் காண்!

பேசாமல் கண்மூடி உன்னோடு கரைவதாய்
கற்பனையில் மிதக்கும் ஊண்
தூணின்றி குடை விரிக்கும் மனதில் வான்

Tuesday, March 1, 2011

ஆத்தா!

தூரத்துல கொலவயிட்டு
நடவுக் கன்னு நட்டு வெச்சு
கூலிக்கு மாரடிக்கும்
மயிலு, குயிலு, சிட்டு, முப்பாத்தா!

மார் நனைச்சி பசியடங்கி
கண் வளரும் புள்ள
நோவாம தூங்கிட
தாலாட்டு படிச்சிருந்தா முப்பாத்தா

நெடுநாளா நடு மத்தியில
கெள விரிச்சி வேப்பமரம்
தொட்டில் கட்டிப் போட எசவாயிருக்கு

அடிமரத்துல சந்தனம்
அது மத்தியில குங்குமம்
மஞ்சத் துணி மரத்திடுப்புக்கு
சூலம் ரெண்டு பாதுகாப்புக்கு

எளசுங்க, நேந்து கட்டும்
தொட்டில்கள ஏத்துக்கிட்டு
புள்ள வரமும் குடுத்து
கொஞ்சிகிட்டிருக்கா இந்த
செல்ல ஆத்தா!