Sunday, April 3, 2011

பிரசார லேகியம்

அவருக்கோ செரிக்கவில்லை
மருத்துவரும் சொல்லிவிட்டார்
"ஏதாவது செய்யுங்கள்
குறைப்பதைக் குறைக்க"!

இருக்கவே இருக்கு
பிரசார லேகியம்
ஒரு நாளைக்கு இரு வேளை
பேசலாம்... குறையும்!

நல்ல வார்த்தைகள்
நம்பிக்கை தரும் சொற்கள்
பஞ்சத்தில் வீழ்வதில்லை
எந்த நாட்டிலும்! 
 
செரிக்காதவர் பேச்சை
பசியோடு கேட்கும்
பாமரனுக்கோ லேகியமே உணவு!



Saturday, April 2, 2011

வெற்றியின் வணக்கம் (World cup dedication)

காற்றில் ஒருவித வாசம்
இம்மண்ணின் மைந்தர்கள்
வெளிவிடும் சுவாசம்

எந்தன்  கதிரொளி வீசும்
இம்மண்ணின் பெருமையை
காலங்கள் பேசும்!

என் இதழ் இவர் பதம் தொடும்போதும்
பணிவின் கண்ணீர் கர்வம் அணைக்கும்
தாய்மையின் நிரல் இவர் உள்ளம்
இனி எந்தன் முகவரி இவர் பெயர் ஆகும்

வெற்றி எந்தன் வணக்கம்
இம்மண்ணுக்கு என்று உரித்தாகும் நாளும்


மன முகில் விம்மிப் புடைத்து...!

ஓடையில் விழுந்த தென்றலாய்
மனம் குளிர்ந்தது ஏதோ சிந்தையில்!
விரல்களின் நாணம் உடைத்து
தமிழ் கிளர்ந்தது மனமுகில் விம்மிப் புடைத்து!

எனக்கு உரிமையில்லா தனிமையில்
எனை உரிமை கொள்ளாத மௌனத்தோடு
நிசப்தப் பாய்மீது கிடந்தேன்
தாய்மடிச் சுகமதை தமிழ் மடியிற் துறந்து!

சந்தி வேளைச் சூரியன்
கரைத்து வைத்த சந்தனம்
எந்தன் முதல் பாவுக்கு
இறைவன் தந்த சம்மதம்

கூரைக் காகம் கூட
எந்தன் பாடல் கேட்டுக் கரையும்
கோடை வானக் கிளிக்கும்
எந்தன் சந்த நடை புரியும்

என் மனமுடுத்தக் கள் எல்லாம்
இனி கவிதையாக வடியும்
அந்தக் கள் கவரும் கள் வெறியர்
கவிஞராக முடியும்!

தன் கையெழுத்தில் கூட
இவன் வாழாத நாளும்
இவன் எழுத்தொன்றும் படிப்போர்க்கு
வாழ்வாக வேண்டும்