Monday, June 27, 2011

வாசிக்கப் படாத வரி

ரசித்த கவிதை
ருசித்த கவிதை
சுகம் சேர்த்த கவிதை
சோகம் தீர்த்த கவிதை
மனம் நனைத்த கவிதை
வருடிய கவிதை
நெருடிய கவிதை
திருடிய கவிதை
எல்லாவற்றிலும் எளிதாய் மறப்பது
கவிஞன் எனும் வாசிக்கப் படாத வரி

Friday, June 24, 2011

நில்லா மழையில்...

நில்லா மழையில்
நனையும் நிலவு
நிலவை நனைத்த துளி
சிந்தும் தமிழமுது
உடலெல்லாம் மதி வாசம்
மழை வந்து வலை வீசும்
திசை மறந்த துளியாய்
எங்கோ எங்கோ எங்கோ
மனதின் நிழலாய் நான்



Thursday, June 9, 2011

இன்றைய பதிப்பகம்



உலக அரசியல்
தீவிரவாதிகள்
கற்பழிப்புக் கதைகள்
கச காசா லேஹியம்
கோலப் புத்தகம்
சினிமா கிசுகிசு...
இந்தக் கூட்டத்தில் கிடந்தது
விலைமதிப்பில்லா
 ஒரு நிராகரிக்கப் பட்ட
கவிதை நூல்...
விலையும் மதிப்புமின்றி!

Wednesday, June 1, 2011

இன்று பெய்த மழை!

எனைச் சுற்றி மௌனம்
மழையோடு அந்தி வானம்
தேன் கலந்த கள்ளாய்
மனம் நனைத்தது

நான் கடந்து வந்த
நாள் திரும்பி வந்து - நான்
நனைய மறந்து போனதை
நினைவில் சொன்னது

காய்ச்சலுக்கு ஆசை
கம்பளிக்கு ஆசை
காரணங்களின் கருவூலத்தில்
காளான் நின்றது - அதில்
வண்ணத்துப் பூச்சி ஒன்று
வந்து மொய்த்தது

விடுப்பு மடல் எழுதி
தட்டி விட்டேன் மனப் புழுதி
பொய் சொன்ன நிறைவு
மீண்டும் என் இதழோரம்

மறக்காமல் இவை செய்துவிட்டு
வெளிப்பூட்டு தாள் போட்டுவிட்டு
மன வானின் முதல் மேகம் தொட்டுக்
கவிதை செய்த நொடியில்
மழைத் துளியொன்று எனக்காக
வந்து விழுந்தது மடியில்
 என்றும் இல்லாத மெல்லிசையும்
இருந்தது இடியில்!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/