Saturday, January 29, 2011

இன்னுமா உறக்கம்?!

காலையில் சாலையில்
அடிபட்ட நாய்க்கு மருந்திட்டு

அவசரப் பொழுதில் வாகனம் நிறுத்தி
பள்ளிச் சிறுவர்க்கு வழிவிட்டு

தெருவின் ஒவ்வொரு கோடியிலும்
யாசகனின் பசி தீர்த்து

ஊருக்கு உழைக்கும் யோகம் கண்டு - பின்
எனக்கான அலுவலிலும் நுழைந்து

இன்முகம் மாறா புன்சிரிப்புடன்
ஒரு நாளைச் சுமுகமாய் முடித்து

என் வாகனத்தில் இருந்த அணில்
அதுவாய் இறங்கும்வரை பொறுத்து

அந்த இடைவெளியில் அந்தி வான் முகிலில்
மழலை நாட்களை விரித்து

கண்கள் பனித்து மென் தென்றல் சுகித்தபடி...
திடீரென அந்த அணில் "Excuse me boss...it's 5:30" என்றது

அதிர்ந்து விழித்தேன்...அருகில் கடிகாரம்
இது...இன்னுமொரு அவசரத் திங்கட்கிழமை

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Wednesday, January 26, 2011

ஐயக் கருக்கலே

தேயிலைமீது பனித்துளி
தேநீர் சுமக்கும் தென்றல்!
மேகம் நடத்துகின்ற முழு அடைப்பில்
தன்னைப் பதித்தன கண்கள்

பனித் திரையில் தென்றல் பரியில்
உத்திரச் சூரியக் கதிர் இறங்க
பொன்னொளி வெள்ளம் நெஞ்சிலடித்ததும்
நிலவை மறந்தது நெஞ்சு - விடியலில்
விழுந்த மனதும், மிதக்கின்ற மஞ்சு!

இயற்கை ஓவியன் கழுவித் தெளித்த
தூரிகை தந்த விருந்தோ?! - இது
மயக்கமளித்து மனநோய் தீர்க்கும்
அரிய வகையின் மருந்தோ!!

கொல்லன் ஊதிய தங்கத் தூசு
பனியில் கலந்ததுவோ!!
என் விரல்கள் எய்தும்
வரிகள் கிழித்த கிழி தான் சிந்திடுதோ!!

ஐயக் கருக்கலே
விடிந்து கருத்தைச் சொல்
மையலில் விழுந்தது மனது!

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Wednesday, January 19, 2011

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறப்பும் ஒக்கும் - இதை
உய்த்துணர்ந்து அடக்கம் உற்றால்
அமரரில் உய்க்கும்

தாழ்மை உள்ள நிலமே - நீரை
நிரம்ப பிடிக்கும் - அதிலே
தாகமுள்ள உயிர்கள் பருகி
நிரம்ப படிக்கும்

அறிவைப் பகுக்கப் பகுக்க - அறிவு
அறிவே பிறக்கும்
மனிதனைப் பகுக்கும் அறிவை
மனிதம் மனிதம் பழிக்கும்

இன மத குலத்தால் உயர்வு
நவிலும் எவர்க்கும்
ஊழின் அம்பு எய்து வந்து
இழி மரணம் கொடுக்கும்

இந்த உண்மை உற்று உணர்ந்து
வாழும் எவர்க்கும்
யாண்டும் இடும்பை இல

http://mashookrahman.com/
http://www.mashookpoetry.blogspot.com/

Sunday, January 9, 2011

இனி...

நிலவைத் தான் விரும்புமென்று
அல்லியை கதிர் எரிப்பதில்லை
அல்லியின் நாணத்தை
அற்பமென்று பழிப்பதில்லை

அல்லிக்கொரு குளம்
தாமரைக்கொரு குளமென
யாரும் தோற்றி வைப்பதில்லை
எங்கு எதன் பார்வை
அன்பால் மிகுமோ...
அங்கு அது வாழப் புகும்
அன்பைக் கரு கொண்டு
வழிந்து ஓடும் நதிதானே
உயிர்கள் கால் நனைக்கும் யுகம்!

தழுவிக் கலைகின்ற
காலத்தின் அற்ப சுகம்
வியர்வை உலருதற்குள் மறையும்
உயிருக்குள் உயிர் விழித்துப்
பூத்திருந்த அன்பேதான்
ஊழின் முடிவுவரை உறையும்

இன்பம் சிரிதன்று
பேரின்பம் ஒன்றென்று
அன்பைக் குடித்த உயிர் உரைக்கும்

தன ஒளியில் பாதியினை
நிலவிற்கு தந்த கதிர்
அல்லியை எப்படிப் பழிக்கும்?!
இனி...
காலம் அன்பைப் படிக்கும்

http://mashookrahman.com/
http://www.mashookrahman.blogspot.com/
http://www.mashookpoetry.blogspot.com/