மனிதன் வணங்கிய மண் நான்
முகம் மாறிக் கிடக்கின்றேன்!
நதிகள் தவழ்ந்த இன்பம்,
சுவராகி இழக்கின்றேன்!
பிள்ளை விரல் பிசைந்து விளையாட
என் உள்ளம் கசிந்து களி மண்ணானேன்
ஏரும் எருதும் வருடும் சுகத்தில்
முப்போகம் விளைத்து ஒரு தாயானேன்
அமிலம் தெளிக்கா மனிதனுக்கு
அமுதம் தருகின்ற கடலானேன்
இல்லாத நஞ்சை என் மேல் தெளிக்க
அந்தோ! இறந்தே வெறும் திடலானேன்
நெற்றி விளையும் வியர்வைத் துளி - விதை
நெல்லில் உரமானதொரு காலம்
கலையாய் இருந்த விவசாயம்
தொழில் நுட்பமானது இந்த யுகச் சாபம்
மனிதன் பாசம் இன்றிப் போனதும்
என் வாசமும் குன்றிப் போனது
வான்மழை நாளம் வாசித்த ராகம்
சுருதியை இழந்து மாண்டது
உன் பாதம் தாங்கிப் பாரமும் தாங்கும்
அன்னையும் நானும் ஒன்று
உன் மூச்சில் கலந்திருந்த தேசம் நான்
வெறும் மணலாகிப் போனேன் இன்று!
No comments:
Post a Comment